ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பரதக்கலை என்பது தமிழரின் கலை

DONT MISS IT 
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் – 
நன்றி -https://www.linesmedia.in
பத்திரிகையாளர் பா.ஏகலைவன்.


பத்திரிகையாளர் பா.ஏகலைவன்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவர்களின் வரலாறை மாற்றி எழுத வேண்டும்.. கல்வி கற்க விடாமல் தடுக்க வேண்டும்.

கொலைகளில் இது ஒரு வகை.. சிரிச்சுக்கிட்டே கத்தியை வயிற்றில் சொருகுவதுபோன்றது.

இப்போ நீங்க பார்க்கப்போறதும் அப்படி ஒரு பஞ்சாயத்துதான்.

பத்ம விபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட உயர்ந்த பல விருதுகளை பெற்று, நாடு போற்றும் பரதக் கலை நிபுனரான முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள் இன்று பரதநாட்டியக் கலையின் பிதாமகராக கூறப்படும் பரதமுனிவருக்கு ஒரு நினைவு மண்டபமும், கண்காட்சி அரங்கத்தையும் அமைத்துள்ளார்.

இதன் மூலம் பரதநாட்டியக் கலை பரத முனிவர் மூலமாக உலகுக்கு கிடைத்தது. அவர்தான் அதற்கான 'நாட்டிய சாஸ்திர' நூலை இயற்றினார். அதற்கு முன்பு அப்படி ஒரு ஆடல் கலையே இல்லை என்ற பிம்பத்தை, உருவாக்கி வைத்துள்ளார்கள். 

பொதுவாகவே இந்த பரதநாட்டியக் கலை ஆரியர்களுக்கு உரியது. மேல்தட்டு வர்க்கமான பார்ப்பனர்களிடம் இருப்பது. உயர்ந்த , கலையாக போற்றப்படுவது என்ற கட்டமைப்பையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரலாறுகளை காலம்தோறும் திரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில்தான் இப்போது பரத முனிவருக்கான நினைவு மண்டபமும், கண்காட்சி அரங்கமும் அமைத்துள்ளார் முனைவர் பத்மா சுப்ரமணியம். "நான் பரதம் கற்றுக்கொண்டது தேவதாசி வழிவந்தவரான மயிலை கௌரியம்மாளிடம் தான்" என்று கூறிக்கொண்டாலும் 'வரலாற்று பதிவுகளை' என்னவோ பரத முனிவர் அடியொற்றிதான் இவர் பதிக்கின்றார் .

பதரநாட்டியக் கலைக்கு பரதமாமுனிவர்தான் நாட்டிய இலக்கணம் வகுத்தார். நாட்டிய சாஸ்த்திரம் என போற்றப்படும் அந்த நூல் மூலம் தான் பரதக்கலை இன்றும் அழியாமல் போற்றப்படுகிறது. இந்த கலைக்கு ஆதியும் அந்தமும் பரதமுனிவர் தான் என்பதாக கூறுகின்றார். இது இவர் மட்டுமல்ல, இவர்களின் வழித்தோன்றல்களும் அப்படித்தான். 

தமிழர்களிடம் இருந்த வான சாஸ்திரம் உள்ளிட்ட பல கலைகளை எடுத்து திரித்து தனதாக்கிக் கொண்ட பல வரலாற்று திரிபுகளில் நாட்டியக்கலையும் ஒன்று.

பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்திரம் நூல் வகுத்தார் என்பது உண்மைதான். மிக முக்கிய நாட்டிய நூலாக போற்றப்படும் அந்த நூல் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டது. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கெல்லாம் மூலம் எங்கே? எங்கிருந்து அவற்றைக் கற்றார். எங்கிருந்து எடுத்தெழுதினார்? அதற்கு முன்பு ஆரியர்களிடம் அந்த கலை இருந்ததா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலைத் தேடினால், இல்லை என்பதே பதில். 

ஆனால் தமிழர்களிடம் இருந்தது. எப்போதிருந்து? இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து! கி.மு. 5-ம் நூற்றாண்டில் தொடங்கி  கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான சங்க காலம் என்கிறோமே அப்போதிலிருந்தே. அதன் பெயர் சதிராட்டம். ஆடல் பாடல் கூத்து என்ற பெயர்களில் இந்த தமிழ்ச் சமூகம் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கின்றது. (ஆனால் தொல்காப்பியரின் காலம் கி.மு.711 என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் கி.மு. 7.ம் நூற்றாண்டு என்பதே சரி எனலாம்)

அந்த காலகட்டங்களில் எழுதிய பல நூல்கள் மறைந்து போயிருந்தாலும் தொல்காப்பியம்,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்கணக்கு ஆகிய நூல்கள் அரிய வகை முக்கிய நூலாக கிடைத்திருக்கின்றன.

இதில் தொல்காப்பியத்தில் சதிராட்டம் (நாட்டியம்) பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பத்துப்பாட்டில் நடனக் கலைஞர்களை விறலியர், கூத்தர் என்றே அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதே காலகட்டத்தில், அதாவது தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திலேயே கூத்தனூரைச் சேர்ந்த சாத்தனார் என்பவரும் வாழ்ந்திருக்கிறார். நாடெங்கம் சுற்றியலைந்து மக்களிடம் உள்ள நாட்டியக் கலைகளைப் பற்றிய ஆய்வுகளையும் குறிப்புகளையும் தொகுத்து "கூத்த நூல்' ஒன்றை இயற்றியுள்ளார். நாட்டியக்கலை பற்றி மிகச் சிறந்த, பழமையான நாட்டிய இலக்கண  நூலாக இது பார்க்கப்படுகிறது.இவர் 'நாட்டிய பிரம்மா' என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றார். இதில்கூட பரதநாட்டியம் என்ற பெயர் குறிப்பேதுமில்லை. சதிராட்டம், ஆடல் பாடல், நாட்டியம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய 'அடியார்க்கு நல்லார்' உரை மூலம் ஆடல் கலை தொடர்பான,  அகத்தியம், சிகண்டி முனிவர் இயற்றிய, 'இசை நுணுக்கம்', யாமளேந்திரர் எழுதிய இந்திர காளியம், ஆதிவியலார் எழுதிய பரதசேனாதிபதியம் பாண்டி மன்னர் மதிவாணர் செய்த மதிவாணம் என நூல்களை அறிய வருகிறோம்.  

இவற்றிலெல்லாம் முன்னோடியாக இருப்பது கூத்தனூரை சேர்ந்த சாத்தனார் எழுதிய 'கூத்த நூல்' என்பதுவே.

இந்த 'கூத்த நூல்' ஒன்பது பகுதிகளை கொண்டிருக்கிறது.

1) நடனக் கலையின் தெய்வீக உணர்ச்சிகளை விவரிக்கும் "சுவை நூல்". நாட்டியம், இசை, நாடகம் ஆகிய கலைகளின் தெய்வீகத் தோற்றம், பல்வேறு ஒலிகளின் தோற்றம், அரங்கில் உணர்ச்சிகளை வெளியிடும் முறைகள், இவற்றிக்கான கோட்பாடுகள் என இதனுள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

2) இரண்டாவது சிவபெருமான் ஆடிய 108 தாண்டவ நாட்டிய முறையை விவரிப்பது. 12 சிவதாண்டவ நாட்டிய முறைகளின் 39 வடிவங்கள், அதிலிருந்து பிறந்த 12 வித நாட்டிய முறைகள் என்று மொத்தம் 144 நாட்டிய முறைகள் பற்றி விவரிக்கும் 'தொகை நூல்'.


3) அடுத்து இயற்கை வடிவங்கலான  நீர், நிலம் , நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பாகுபாடுகளை ஓட்டி அமைக்கப்பட்ட நாட்டிய வடிவங்களான கிராமிய நடனங்கள் பற்றிய 'வரி நூல்'.

4) நான்காவது, 120 கரணங்கள், அவற்றிக்கு தகுந்த முத்திரைகள் என நாட்டிய குறிப்புகளின் தொகுப்பான 'கரண நூல்'.


5) நாட்டியத்தின் போது, கண்கள், கால்கள், கை, விரல்கள், தொடை, பாதம் என அங்க அசைவுகள் எப்படியெல்லாம் முத்திரை பதித்து இருக்க வேண்டும் என்று விவரிக்கும் 'கலை நூல்'!.

6) ஐந்து அடிப்படைத் தாளங்கள், அதிலிருந்து  கிடைத்த 35 தாளங்கள், ஆட்ட தாளம் எனும் அகஸ்த்திய முனிவரின் 108 தாளங்கள் என விவரிக்கும் 'தாள நூல்'.


7) மறைந்த முப்பது பண்களின் ஆரோகண, அவரோகண வரிசைகளையும் விவரிக்கும் 'இசை நூல்'. தேவாரத்தை எழுதிய நாயன்மார்கள் இப்பண்களை கையாண்டிருக்கிறார்கள்.

8) அரங்க அமைப்பு முறை, அதற்கான ஒலி, திரை, நாடக உணர்ச்சிகளுக்கான ஒளி வடிவங்கள், ஒப்பனை, ஆகியவற்றை விவரிக்கும் 'அவை நூல்'.


9) நாட்டியத்தின் குறிக்கோள், உடல் வலிமையும், குரல் வளமும் குன்றாமல் இருக்க தேவையான மருந்துகள், களிம்புகள், உடற்பயிற்சி, யோக சாதனை, மனதை ஒரு நிலையில் வைக்கும் முறை, நாட்டியத்தில் மூர்ச்சை அடக்கும் முறை என்பதை பற்றியெல்லாம் விவரிக்கும் "கண் நூல்'.

என்று நாட்டியத்தின் எல்லா கூறுகளையும் விளக்கும் 'கூத்த நூலில்'கூட பரத நாட்டியம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. கூத்தக்கலை,சதிராட்டம் என்ற பெயர்களிலேயெ குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதற்கடுத்து வந்த சிலப்பதிகாரத்திலும் ஆடல் பாடல் நாட்டியக் கலைக்கென்று தனியே 'அரங்கேற்று காதை' படலமே சான்றாக உள்ளது. நாட்டியக் கலையின் எல்லா கூறுகளையும் இந்த அரங்கேற்ற காதையில் காணலாம்.  அரங்கேற்றுக் காதையில் நடனம், அரங்கு உள்ளிட்ட ஒவ்வொன்றை பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

இந்த காலகட்டத்தை ஒட்டிதான் பரதமுனிவர் வருகிறார். மேற்சொன்ன தமிழறிந்த கலைஞர்களின் நூல்களில் இருந்து, இங்கிருந்த ஆடல் பாடல் கலைகளில் இருந்து அனைத்தையும் எடுத்து வடமொழியில் தொகுத்து 'நாட்டிய சாஸ்த்திர' நூலாக ஆரியர்களுக்கு விட்டுச் சென்றார். அதாவது வடநாட்டவருக்கு.

அவர்களின் வழித் தோன்றல்களும் அதைத்தான் முதன்மைபடுத்தி வருகிறார்கள். நாட்டியம் என்றாலே சதிராட்டம்,தொல்காப்பியம், கூத்தநூல், சிலப்பதிகாரம், சிவதாண்டவத்தை மறைத்துவிட்டு, பரதமுனிவர் இயற்றிய 'நாட்டிய சாஸ்த்திர'த்தையும், நடராஜரையும் தூக்கிப் பிடிப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நடராஜர் நாட்டியமாடும் விஷயம் இருக்கிறதே, அது எப்போது, எங்கே, எப்படி என்பதுதான். சிவபெருமானின் (108) தாண்டவத்திற்கு கூத்தனார் எழுதிய 'கூத்த நூல்' ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் சிதம்பர நடராஜருக்கு? 

சங்ககாலத்திற்கு அடுத்து, இடைக்காலம் தொடங்கிய கி.பி. 4-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் வந்த இலக்கியங்களான மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்கூட ஆடல் பாடல் கலையான நாட்டியத்தைப் பற்றி கூறுகிறது. அதிலும்கூட நடராஜர் தாண்டவம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.  

அதற்கடுத்து கி.பி.ஏழாம் நூற்றாண்டு காலத்தில்தான் பக்தி இசை தழைத்தோங்கியதாக ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றது. இந்த காலகட்டத்தில் தான் 'நடராஜர்' நாட்டியமாடிய  வித்தை புனையப்பட்டது, புகுத்தப்பட்டது. சுறுங்கச் சொன்னால் (சிதம்பர) நடராஜர் நாட்டியம் என்பது ஒரு புகுத்தப்பட்ட கற்பனையே. தேவார ஆய்வாளர்களின் கூற்றும் அதுவாகதான் உள்ளது.  

அடுத்து தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் தான் இசை நாட்டிய வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.(கி.பி.985-1014) அதற்கடுத்து 12 நூற்றாண்டில் ஜெயதேவர் என்பர் வடமொழியில் 'ஜெயகோவிந்தம்' இயற்றினார். இது அஷ்டபதிகள் என்று அழைக்கப்பட்டு நாட்டிய வடிவமாக விளங்குகிறது. அதற்கடுத்து 15-ம் நூற்றாண்டில் தோன்றிய அருணிகிரிநாதர் நாட்டிய வடிவத்திற்கான இசை வடிவங்களை படைத்தளித்தார்.

'பிற்காலம்' என்றழைக்கப்படும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துத்தாண்டவர் பதம் எனும் இசை வடிவங்களை உருவாக்கினார் என்று நகர்கின்ற இசை-நாட்டிய வரலாற்று நூல்களின் தொடக்க காலம், 'பரதநாட்டியத்திற்கு வித்திட்டவர் பரத முனிவர் என்றோ, அதற்கான தொடக்க நூல் வடிவம் 'நாட்டிய சாஸ்த்திரம் என்றோ எங்கேயும் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழர்களின் அரசியல் தளத்தில் மட்டுமல்ல, அவர்களின் கலை பண்பாட்டுத் தளத்திலும் திரிப்புவாதமும்- புரட்டுகளும் நடந்தேறிக்கொண்டுதானிருக்கின்றது.அது, இன்றுவரை தொடர்கிறது/

கொசுறு தகவல்:
பரத முனிவரின் மணி மண்டபத்திற்கான ஐந்து ஏக்கர் இடம் ஜெ.ஆட்சியில் கொடுக்கப்பட்டது. அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில் அடிக்கல் நாட்டும் விழா எடுக்கப்பட்டது. அதற்கு கலைஞரிடம் ஒரு வாழ்த்துக் கடிதம் கேட்க அவர் மறுத்தார். பரதக்கலையை இளங்கோவடிகளில் இருந்து தான் ஆய்வுக்கு எடுத்தாள வேண்டும். தொடக்கம் அதுதான் என்றார். அதை பத்மா சுப்ரமணியன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இது பற்றிய செய்தி அப்போது தினகரனிலும் வந்தது. விவாதமும் நடந்தது.

அதனால் மனஸ்தாபம் முற்றியது. அரசு கொடுத்த இடத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் யோசித்தார் கலைஞர்.

ஆனால் ஆரிய ஆட்டம் வேறு மாதிரியானதாயிற்றே. அதிகார பீடமான சங்கரமடத்திற்கு தகவலை சொல்ல, அங்கிருந்து டெல்லி 'மையத்திற்கு' தகவல் போக, அங்கிருந்து விதம் விதமான அழுத்தம். வருமான வரித்துறை அது இது என்று எத்தனை இருக்கிறது?!!

கடைசியில் என்ன நடந்தது என்றால் மீண்டும் நடந்த ஒரு விழாவில் கலைஞர் நேரில் சென்று கலந்து கொண்டு வாழ்த்தி பேச வேண்டியதாயிற்று. அப்போதும், பரதர்களிடம் இருந்த கலை இது- அது என்று 'அடையாள' எதிர்ப்பை மைல்டாக தெரிவித்துவிட்டு வந்தார். (இப்படி, பலவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டே வீரம் பேசினார் என்பது வேறு கதை)

தவிர இதுகுறித்து பல்வேறு விவாதங்கள், எதிர்ப்புகள் ஏற்கனவே நடந்திருப்பதை இணையத்தில் ஏராளமாக பார்க்கலாம்.


கட்டுரையாளர் -$பா.ஏகலைவன்.
பத்திரிகையாளர்- எழுத்தாளர்.

Source- 
பேராசிரியர், டாக்டர்.செல்லதுரை (அருட்தந்தை.சேசு சபை) எழுதிய 'தென்னக இசையியல்' நூல்.
கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர்/ பேரா. ஹேமநாதன்.
தேவாரம் ஆய்வாளர் முனைவர் சுரேஷ். (மதுரை)
மற்றும் சில இசையியல்-நாட்டியக்கலை பேராசிரியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக