திங்கள், 5 பிப்ரவரி, 2018

சரிந்த குடலும் தொலைந்த நம்பிக்கையும்.

*சரிந்த குடலும் தொலைந்த நம்பிக்கையும்*

அறிவுப்பிதாக்களே ஆழ்ந்த இரங்கல்கள்
மாதா பிதாவானவர்களே
எதிர்காலத்தின் நம்பிக்கை ஏணிகளே
பள்ளி குருக்களே
நிறைய வருத்தங்கள்

சிலேட்டு தொடங்கி செயலிவரை உங்கள் கல்விப் பிரமாதம்
பெரிய மலைப்பு
எவ்வளவு புதுமைகள் எத்தனை திட்டமிடல்கள் எத்தனை மாற்றங்கள்
சமச்சீர் முறை
வண்ண அட்டை
இன்னபிற எண்ணிலடங்கா முறை

பெருங்கல்வியாளர்களின் பெருத்த சிந்தனைகள்
அடிக்கடி பயிற்சிகள் அளவில்லா மதிப்பீடுகள் விரட்டும் அதிகாரிகள் மாநில ஆய்வுகள்
எத்தனை வேகம் எவ்வளவு துல்லியம்
அட டா 
சிலிர்க்கிறது நினைக்க நினைக்க செம்மாந்த உங்கள்துறை வளர்ச்சி

ஓடி ஓடி மாணவன் வீடுதேடி கைபிடித்து கெஞ்சி அன்பாலே கொஞ்சி தம்சுயதகுதியை மிஞ்சி எத்தனையோ செய்தும் எழவில்லையே நம்பிக்கை சமுதாயம்???

மேதகு கல்விப்புலிகளே
முதலில் புள்ளிவிவரங்களை தூக்கி வீசுங்கள் 
வந்து பள்ளி நிலவரங்களை அலசுங்கள்
உங்கள் சந்தேக கண்களை அறிவால் முதலில் கழுவுங்கள்

ஒவ்வோர் ஆசிரியனும் படும்துயர் உணருங்கள்
ஊருக்கு இளைத்தவனாகி எவன் வேணுமாலும் அதட்டி மிரட்டும் குருமார்களின் துயர்களை
முதலில் மனங்கொண்டு உணருங்கள்

மாணவன் மனம்நோக நடவாதீர் என எங்களுக்கு வகுப்பெடுக்குற அதிபுத்திசாலிகளே
எங்களின் மனக்குமுறல்கள் உங்கள் மனங்கீறவில்லையா?

இதோ
என் சொந்தம் குத்துப்பட்டு மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது
இதற்கும் சப்பைக்கட்டு கட்டி ஆசிரியர்கள் மீதே மீண்டும் சேற்றைப் பூசிடாதீர்

முதலில் உங்கள் அறிவுக்கூர்மையை சுயபரிசோதனை செய்யுங்கள்
மனிதமற்று நிற்கிற மழலைகளுக்கு இக்காலத் தேவை எதென்பதை தீர்க்கமாய் தீர்மானியுங்கள்

பாதுகாப்புச்சட்டம் கூட நாங்கள் போராடி நீங்கள் போடப்போகிற பிச்சையாய் இல்லாமல் 
விரைந்து முடிவெடுங்கள்

சொல்லிக்கொடுக்கும் எங்களுக்கே சொல்லிக்கொடுப்பதை மூட்டைக் கட்டி விட்டு 
மனிதம் சார்ந்த கல்வியை முன்னெடுங்கள்

வகுப்பறை சுதந்திரமாய் செயல்பட விரும்பும் நீங்கள் தான் குருக்களின் கைகளில் விலங்கிட்டே வைத்திருக்கிறீர்கள்

இது
எங்கள் ஒட்டுமொத்த மௌனத்தின் முதல்குரல்

எங்கள் உறவு சிந்திய ரத்தம் உலர்வதற்குள்ளாவது 
உணருங்கள்
எழுத்தறிவித்தவன் இறைவனென்று..
அவனுக்குப் படையலிடுதலே வழக்கம்
அவனையே பலியிடுதலா இக்கால வழக்கம்??
தெளியட்டும் குழப்பம்.
2020க்கு ஈராண்டுகளே மிச்சமிருக்கிறது
ஆசானின் அவசியமுணருங்கள்
நாளை  முதலேனும் நற்பூக்கள்  பூக்க புதுவிதி எழுதுங்கள்..

ஆறா வருத்தங்களுடன்,
*சீனி.தனஞ்செழியன்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக